முன் குறிப்பு:
- என் முதல் சிறுகதை இது. பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொண்டு படிக்கவும்.
- தயவுசெய்து லாஜிக் பார்க்க வேண்டாம்.
- சத்தியமாக காதல் கதை தான்.
- இதில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. அவன், அவள், நண்பன், யாரோ..... இப்படி தான் குறுப்பிடபட்டுள்ளது.
- முக்கியமானதா சொல்லாம விட்டுட்டேன், இச்சிறுகதைகான தலைப்பை கண்டுபுடியுங்கள்...
பார்வையின் கிறுக்கல்கள்- I
டக... டக... டக... அரசு பேருந்திற்கே உரிய இரைச்சலோடு எங்கிருந்தோ வந்துகொண்டிருந்தது.
அவ பேரு என்ன டா...
அரசமர கிளைக்களுக்கிடையே கிழித்து கொண்டு வந்த வெயிலுடன் சேர்ந்து அவனும் சற்று எரிச்சலாகிப் போனான்.
அலறிக்கொண்டிருந்த ரேடியோ செட்டின் இசையை கேட்டு கொண்டிருந்தவனுக்கு, அது மக்கர் செய்யும் பொது ஏற்படுகின்ற வெறுப்பை, எரிச்சலைப் போல் அவன் முகம் மாறுவதை நண்பன் உணராமல் இல்லை.,
உன்ன தான் டா கேக்குறேன்....
சற்றும் தாமதிக்காமல் பார்வையை இடம் மாற்றிக்கொண்டே மூளைக்கு வேலைக்கொடுதான்.
படித்த புத்தகம், பார்த்த சினிமா, கேட்ட பெயர் இப்படி அனைத்தையும் அவன் நினைவுக்குள் வரவழைக்க முயற்சித்து தோற்றான், மீண்டும் மீண்டும் முயற்சிக்க தயாராக இருந்தான்.
"------"
எப்டியாவது ஒரு பேர இவன்ட்ட சொல்லிட வேண்டும், இல்லேன்னா நா சொல்றத கண்டிப்பா நம்ப மாட்டன்.
"------"
தேடலுக்கு விடையாக ஒரு பெயர் கிடைத்தது. அந்த பெயரை சொல்வதற்குள் அவனே வாய் தவறி வேறு ஒரு பெயரை சொல்லிவிட்டான்.
கண்மணி. இந்த பெயர் அவனை அறியாமல் வந்தது தான் என்றாலும் அந்த பெயர் வந்த வழி அவனுக்கு நன்றாகவே தெரியும். அவனது அப்பா உச்சரிக்கும் ஒரு பெயரின் சுருக்கம். அவன் அவனது மனைவியை இந்த பெயரை சொல்லித் தான் கூப்பிட வேண்டுமென உள் மனதின் ஆசை. ஆசையின் எதிரொலியாக இருக்கலாம்.
கண்மணி...?
அப்படி அவன் கேட்டதில் கேள்விக்குறி படர்ந்ததை கவனித்தான். அவள் பெயருக்கான விளக்கம் கேட்க போகிறானோ என நினைத்து கொண்டான்.
ஆமாம்.,
இந்த பேர சொல்றதுக்கு தான் இவ்ளோ நேரமா...! எளக்காரம் வெளிரியதை அவனால் அறிய முடிந்தது.
அவன் இதுவரை அவள் பெயரை அறிந்ததே இல்லை. தெரிந்துக்கொள்ள முயற்சித்ததும் கிடையாது. எப்போதும் அவன் சொல்றது, அவ பேர ஏன் தெரிஞ்சிகனும்..? அதான் அவளையே எனக்கு தெரியுமே..? அப்புறம் எதுக்கு..? பல மாதம் சில வருடம் இப்படிதான் கழிந்தது.
நண்பனிடம் தாமாக பேச்சு கொடுக்கலாம், இல்லையென்றால் அவன் எதாவது குதர்க்கமாக கேள்வி எழுப்பினாலும் எழுப்பலாம் என்று யோசித்தவாறு வாயை திறந்தான்.
அவள ஏன் பாத்தேன், எதுக்கு புடிச்சிது எதுவுமே தெரியல மச்சி. இப்ப ரோட்டுல போறப்ப எத்தன புள்ளைகள நாம பாக்குறோம், அத்தென புள்ளைகளும் நம்மளை பாக்குதா, இல்லையே..? ஆனா இவ எண்ணெய பாக்குறா மச்சி.. அதுக்கு என்னடா அர்த்தம்., ஒரு வழியாக தன் காதல் கதையை ஆரம்பித்துவிட்டோம் என்ற பெருமையில் பூரித்தான்.
நண்பன் எதாவது சொல்லுவான் என்ற ஆவலோடு இருந்தவனுக்கு, எங்கிருந்தோ ஊர்ந்து வருவதற்க்கான அடையாளத்தோடு கர கர ஒலியை எழுப்பியவாறு பஸ் வந்தது. அவனுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம்.
டீக்கடை, அரசமரம், பிள்ளையார், கொடி கம்பம், பஸ்ஸின் உடம்பை ஏறி மிதிப்பதற்கு தயாராக இருந்த கூட்டம் இவற்றை பார்த்து பயந்தவாறே வந்த பஸ் அவனை பார்த்தும் சற்று ஆறுதல் அடைந்திருக்கலாம். எங்க உன் ஆளு, இன்னும் வரலையா..? கேட்பதற்கு பதிலாக ஹாரன் சத்தத்தை எழுப்பியது. அவள் வருவதற்கும், சத்தம் நிற்பதற்கும் சரியாக இருந்தது.
இதுவரை அவன் முகத்தில் மறைத்து வைத்திருந்த வெட்கங்கெட்ட சிரிப்பு அவனுடன் ஒட்டிக்கொண்டது. அவளும் கண்ணாடியின் பிம்பம் போல் பஸ் ஏறினாள், அவனும்.
புன்னகை. மர்ம புன்னகை. மோனலிசாவுடன் இவளை கண்டிப்பாக ஒப்பிடலாம்.
பார்வையின் கிறுக்கல்கள்- II
புன்னகை. மர்ம புன்னகை. மோனலிசாவுடன் இவளை கண்டிப்பாக ஒப்பிடலாம்.
நண்பன் ஏதோ கேட்கிறான் என்பதை மட்டும் உணர்ந்தான், ஆனால் அது என்னவென்று அவன் கேட்க விரும்பவில்லை.,
அவன் பார்வை முழுவதும் அவள் மீது மட்டும் விழுகிறது. அவளோ, அவள் பார்வை அவன் மீது விழாமலிருக்க பார்வையை இடமாற்ற முயன்று தோற்றுப்போய் நிமிர்வதற்கும் சரியாக இருந்தது. அவள் விழிகளிலும் அவனை சந்தித்துவிட்டது.
எதிர்பாராத இச்சம்பவம் அவளையும் செயலிழக்க செய்துவிட்டது. சற்று தடுமாறினாள். தன்னுணர்வுப் பெற்று அவனிடமிருந்த பார்வையை மீட்டுக்கொள்ள சில வினாடிகள் சென்றன.
எதிர்பாராத இச்சம்பவம் அவளையும் செயலிழக்க செய்துவிட்டது. சற்று தடுமாறினாள். தன்னுணர்வுப் பெற்று அவனிடமிருந்த பார்வையை மீட்டுக்கொள்ள சில வினாடிகள் சென்றன.
வெட்கமும் நாணமும் அவளை ஒரு சேர வட்டி வதைத்தன. எழிலும் இளமையும் பொங்கும் அவளது கன்னக் கதுப்புகள் அதிர்ச்சியில் உறைந்து போயின, சிரிப்பும் மகிழ்ச்சியும் அடங்கிய கரிய விழிகள் திக் பிரமையும் பேதமையும் தீண்ட மேல் நோக்கிய பார்வையிலிருந்து தாழ்ந்து தணிந்தன.,
அவன் அவ்வாறு நினைத்தது அவனுக்கே அருவருப்பூட்டுவதாக இருந்தன. தான் வேண்டுமென்றே அவளை அந்த எண்ணத்தில் அவளை நிர்பந்திக்க வந்துவிட்டதாக எண்ணி அவள் அண்ணனிடம் சொல்லிவிடுவாளோ..? அவளுக்கு அண்ணன் இருப்பனா..? என் கற்பனையை உணர்ந்தாள் தானே அவள் சொல்லுவாள்..? இதையெல்லாம் நினைத்து மனம் சஞ்சலப்பட்டது. இந்த அருவருப்பும், வெட்கமும் அவனது உள்ளத்தின் நல்லெண்ணங்களில் முண்டியடித்துக் கொண்டு வெளிபடுத்திய உணர்வுகள் என்பதை அவன் உணரத் தலைப்பட்டான், ஒரு வாலிபனுக்குரிய சேஷ்டையான எண்ணங்களும் செயல்களுக்கான உந்தல்களும் அவனுள் எழுந்து உறுத்தி, உலுக்கிய போதிலும், தான் நிதானம் இழக்காமலிருக்க முயற்சி செய்தான். என்ன செய்வது..? நிறுத்த வேண்டியது தான் கற்பனையை. நிறுத்திவிட்டான். அவளிடமிருந்து பார்வையை எடுத்துக் கொள்வது மனப் போராட்டமாக அவனுள் அலையை எழுந்தது. அவளின் சிரிப்பு அதை அப்படியே அமுக்கிவிட்டது. அது அக மகிழ்ச்சியும் இன்ப களிப்பும் கொண்டதாக இருந்தது.
நண்பன் இதை தான் கேட்டிருப்பான் என யூகித்தவாறு தன்னை தயார் செய்து கொண்டான்.
மொட்ட மாடி, கடைத்தெரு, கல்லூரி வாசல், பேருந்து நிலையம்.... அவன் மனதில் அடையாளமாக பதிந்த சுவடை சுரண்டிக் கொண்டிருந்தான். அவளை அத்தனை இடத்திலும் பார்த்திருக்கிறேன் எந்த இடத்தை குறிப்பிட்டு சொல்ல.,
அவனது விருப்பபடியே விட்டுவிட்டான்.
அவள், அவனிடம் பார்த்து, பேசி, பழகி, காதல் செய்ய வேண்டுமென்று நினைத்ததுக் கூட இல்லை. ஆனால் அவன் அதையெல்லாம் நினைக்காமல் இருந்ததில்லை. அதுக்குன்னு அவள் விரும்பவில்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது, அவளுக்கு அவனை ரொம்ப புடிச்சதுனால தான் அவளோட பார்வையும், சிரிப்பும் எனக்காக இருந்துச்சு, இதை சற்று வெளிப்படையாகவும் உரக்கவும் சொன்னான். அவள் காதில் விழுந்துவிட கூடாதா என்ற ஏக்கத்தோடு.
சில்லறை சத்தம், விசில் ஒலி, கூட்ட நெரிசல்..... இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வலி அவளை பார்த்துக் கொண்டே வருவது தான் என முடிவு செய்தான்.
ஆனால்.,
நண்பருடைய பலமான சிரிப்பு இதை நம்பவில்லை என்று காட்டியது.
சில விடயங்களை நம்ப முடியாதது தான், பார்தாலூங் கூட என்பதை சற்று கோபத்தோடு சொன்னான்.
நண்பன், அவனை பழயப்படி மாற்றுவதற்கு ஏதேதோ பேசிக் கொண்டு கொண்டிருந்தான். சினிமாவைப் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி, கம்யுனிசம்ப் பற்றி,ஓவியத்தை பற்றி...இப்படி எத்தனையோ பற்றிகள் வந்துக்கொண்டிருந்தன.
அவன் மனம் எதிலும் நாட்டம் செலுத்த முடியவில்லை. நான் எதுக்கு பொய் சொல்லணும், அதுவும் என் நண்பன். இவனே நம்பலேன்னா வேறு யாரு...? திரும்ப திரும்ப வந்ததே வந்தது.
காற்றோடு சேர்த்து சிரிப்பை தள்ளிவிட்டால், அதை அவன் பிடித்துக் கொண்டு எல்லாமே மறந்துப் போனதாய் மாறினான்.
பார்வையின் கிறுக்கல்கள்- III
நூலகத்துல இருக்குற புத்தகத்தையெல்லாம் படிச்சிட்டா எப்படி இருக்கும்..? என்னை பற்றி எதாவது..? தோழிகளுடன் அவள் அதிகம் வினவுவது எதுவாக இருக்குமென யோசித்தான்.
பொய்யும், உண்மையுமா நீ மத்தவங்க முன்னால இருப்ப, நூலகத்தை பற்றி அவன் அடிக்கடி சொல்வதை நண்பன் கேட்காமல் இருந்ததே இல்லை, அவனுக்கும் பழகிவிட்டது.
பேசிக் கொண்டிருந்தவாறே அருகிலிருந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்தான் "உன்னிடம் பேச வேண்டும்".
தலைப்பு, அவன் மறைத்து வைத்திருந்த ஏதோ ஒரு பக்கத்தை திருப்பியது.
அவன், உங்கள்ட ஒரு நிமிஷம் பேசணும் தெனாவட்டான பார்வையில் கேட்டான்.
அப்புறம் பேசிக்கலாம், அப்புறம் பேசிக்கலாம் இதோடு முடித்துக் கொண்டாள்.
இப்படியே ஓரிரண்டு வார்த்தைகளுடன் அவள் ஒதுங்கிவிடுவாள். இப்படி தான் நடந்து கொள்ள வேண்டுமென அவளுக்கு அவளே கட்டளையிட்டிருக்கிறாள் நெஞ்சழுத்தகாரி.
திடீரென, ஒரு நாள் அவளே வந்து, சொல்லுங்க என்ன பேசணும் என்று என்னருகில் நின்றுவிட்டாள்.
அவன், இதை எதிர்ப்பர்க்கவேயில்லை. வழக்கம் போல் சிரிப்பாள், பார்ப்பாள், சென்றுவிடுவாள் என்று தான் நினைத்திருந்தான்.
அவள். அவன் அருகில், வெகு அருகமையில் அவள் விடும் மூச்சுக்காற்று அவன் தண்டுவடத்தை தாக்கியதோடு அவன் உடம்பிற்குள் ஊடுருவியது.,
தடுமாறி போய் பேசத் தொடங்கினான். இப்போ ஏதும் பேச முடியாது நீ கிளம்பு, இன்னொரு நாள் பேசிக்கலாம். இப்படி சொன்னது அவளுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் முனகியவாறு சென்றாள்.
ஒரு சினிமாவை ரசித்தால் கை தட்டி, விசிலடித்து வெளிபடுத்திவிடலாம். ஆனால் இவளை எப்படி...? உள்ளுக்குள் புலுங்கி கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று அவள் சென்ற பாதையை ரசித்துக் கொண்டிருந்தான்.
அவசரமா ஒரு நா ஜெராக்ஸ் எடுக்க போயிருந்தேன். யாரையோ தான எடுக்க போனேன், யாரா.. யாரா... ஆங். நம்ம அகிரா குரசோவாவை தான்.
உங்களுக்கெல்லாம் ஜெராக்ஸ் எடுக்க முடியாது. அக்கா அவங்களுக்கெல்லாம் எடுத்து தராதீங்க, அவளே பேச்சை ஆரம்பித்தாள்.
அந்த அக்காவை நன்றாக பார்த்து கொண்டேன். பின்னொரு நாள் தமக்கு தேவைப்படலாம்.
நான் வரேன். அவளை விட்டு செல்ல மனமில்லாமல் காற்றோடு சேர்த்து அவளை வருடினேன்.
பதிலுக்கு, "கொன்றுவேன்" புன்னகையோடு விரல்களுக்கு நடன அசைவுகளை சொல்லி கொடுத்தாள்.
அவள் சொல்லி தந்தமைக்கேற்ப விரல்களும் நன்றாகவே அபிநயம் பிடித்தன.,
கொன்றுவேன். சந்தோசம். மிக்க சந்தோசம். அவள் அப்படி சொன்னதுக்கு இரண்டு காரணமிருக்கலாம். ஒன்று. அதிக உரிமையால் அவளறியாமல் வெளிப்பட்ட பாசம், மற்றொன்று வெறுப்பினால் வெளிவந்த வார்த்தை.
எது எப்படியோ இரண்டிலும் நான் இருக்கிறேன் என்ற பூரிப்பில் நடந்து சென்றேன்.
அவன் கால்கள் தான் எதையோ நோக்கி சென்றன. அவன் மனமோ அவள் பார்வை, அவள் சிரிப்பு, அவள்... அவள்.. அவள்....,
அவனருகில் இரு இறக்கை ஒரு உடல் கொண்ட பூச்சி. இறக்கை விரித்து பறந்து கொண்டிருந்தது, அப்போது நினைத்தான். தன் மன அழுத்தத்தில் பதிந்து, பொதிந்து பிறந்த உயிர் தானோ இது..? இதே போல் எத்தனை உயிர் பிறந்து, விரிந்து பறந்து கொண்டே இருக்கின்றன. இப்படி பறக்கின்ற உயிர்களை எல்லாம் ஒன்று சேர்த்தல் தெரிவது என்னவோ..! அது தான் வேறெதும் இருக்காது.,
பார்வையின் கிறுக்கல்கள்- IV
அவனோட பார்வை அவளுக்கு மட்டும். நீயும் அவக்கூட உட்கார்ந்து ஒன்னா சாப்பிட வேண்டியது தான..! இப்படி மனதிற்குள் பதிந்து வைத்திருந்த மனப்பாடப் பக்தி திரும்ப திரும்ப வட்டமடித்தன.
வேப்ப மர நிழல், நிலத்தின் மீது படர்ந்து விரித்த போர்வையின் மேல் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அவள் என்னை கூப்பிட மாட்டாளா..... நினைத்த அதே நேரத்தில் நண்பனின் அலறல் அவனது கற்பனையை சிதறடித்தது.
விதியை மதியால் வென்றதற்கு எதோ ஒரு கதை இருப்பது போல, பசியை வென்றதற்கும் ஏதேனும் கதை இருக்கிறதா..? என்று யோசித்துக் கொண்டிருந்தான், வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை.
நண்பன் என்ன கேட்பான் என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருந்தான், நண்பனல்லவா ..?
ஆமாம். அவளோட வீட்டுலருந்து எங்கிட்ட சண்டைக்கு வந்துட்டாங்க.
அவன் நினைத்ததுப் போலவே அவளுக்கு அண்ணன் இருந்திருக்கிறான்..?
இதை நண்பன் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அவன் அதிர்ச்சியில் அப்படியே தெரிந்தது.
சண்டை வரப்போவதை அவளுக்கும் நல்லாவே தெரியும்.
அவள் வீட்டார்கள் அவனைப் பற்றி கேட்க ஆரம்பிக்கும் முன்பே ஒப்புவித்தாள். அந்த பையன் யாருனே தெரியாது, என்னை அடிக்கடி பார்க்குறான், சிரிக்கிறான் என்ன பன்றதுனே தெரியல.,
அப்போ, நீ ஊரைவிட்டு போய்டு. இது அவன். வார்த்தையை அளவாக பயன்படுத்தினான். வீண் வார்த்தைகள் வீண் வம்புகளை இழுக்குமென்பதை அவன் நன்றாக அறிந்திருந்தான்.
அவன் வாயிலிருந்து வந்த வார்த்தையை அண்ணனுக்கு உள்ளூர எதோ செய்தது.
சண்டை ஆரம்பம். எங்கு ஆரம்பித்தோமோ, அதையெல்லாம் விட்டுட்டு எங்கெங்கோ போய்க் கொண்டிருந்த சண்டையை சிறு மௌனம் சமாதானம் செய்தது. காற்று மட்டும் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தது.
அவ விரும்பாதவரை அவளை நா தொடர மாட்டேன், இப்படியாக சண்டைக்கு முற்று புள்ளி வைத்தாயிற்று.
நண்பன், அவ எப்படி உனக்கு ஒத்துப் போயிட்டு அப்புறம் காட்டிக் கொடுத்தா..?
அதானே எப்படி காட்டிக் கொடுத்த..? அதே கேள்வியை அவன் தனக்கு தானே கேட்டுப் பார்த்து கொண்டதது தான். அதற்க்கான விடையை அவனாலும் இதுவரை தெரிந்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், சமாளித்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.
நண்பன், எப்படியும் அவளுக்கு சாதகமாக தான் சொல்லப் போகிறான் என்பதை நினைத்த மாதிரி இருந்தது அவன் பார்வை.
சுஜாதா சொல்ற மாதிரி பெண் என்பவள் ஒரு ஒட்டுண்ணி. யாருடனாவது ஒட்டிக்கொண்டு வாழ்வது தான் அவர்களின் இயல்பு. அவ அப்படி சொன்னதுக்கு காரணங்கள் இருக்கலாம். ஒன்னு, அவ அவளோட வீட்டை சார்ந்து இருக்குறதுனால அப்படி சொல்லிருக்கலாம். இன்னொன்னு ஒருத்தன் பார்த்து சிரிக்குறதுனாலா மட்டும் அவன் நம்மல ஏத்துக்குவானானு சந்தேகம் வந்துருக்கலாம். அல்ல..., போதும் இதற்க்கு மேல் எந்த முக்கிய காரணமும் இருக்க முடியாது என்பதால் இதோடு நிறுத்தி கொண்டான்.
தான் நினைத்தது சரி என்ற பெருமிதத்தில் அவனை பார்த்தான் நண்பன். ஆண்கள் விட்டுக்கொடுத்து போவதும், அதனால் பெண்கள் விடாமல் பிடித்திருப்பதை பல பிரச்சனைகளில் சந்தித்த அனுபவமாக நண்பனுக்கு இருக்கலாம்.
இதுக்கு மேல நீ அவளை பத்தி பேசுன...? நண்பன் பாதியில் நிறுத்திக் கொண்டதற்கு அர்த்தம். அவளை உனக்கே கட்டி வைக்கிறேன், பிரச்சனை எதுவும் வேணாம், உங்கிட்ட பேச மாட்டேன் இதில் எதுவாக இருக்கும் என வார்த்தையை பொருத்தி பொருத்தி பார்த்துக் கொண்டிருந்தான்.,
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர் இருவரும்.
இனிமே அவள நெனைக்க கூடாதுனு எனக்கு நானே தடப் போட்ட, அந்த தடைய ஒடச்சிட்டு அவ மோகத்தைக் காட்டுறா... நா என்ன செய்ய..?
பார்வையின் கிறுக்கல்கள்- V
ஓவியான பொறந்திருந்தா டாவின்சியை விட புரியாத ஓவியமா அவள வரைஞ்சிருப்பேன். கவிஞ்சனா பொறந்திருந்தா கம்பனைவிட ஆழமா அவள வர்ணிச்சிருப்பேன், ஆனா பொறக்கும் போதே அவளோட காதலான பொறந்து தொலைச்சிட்டேன், அவள தவிர வேறெதுவும் நெனைக்க தோணலை.! புலம்பியவாறு அவனும் சென்று கொண்டிருந்தான்.
மௌனத்தை விடக்கூடாது என்ற எண்ணத்தோடு பேருந்து நிலையத்திற்கு அவனுடன் சென்றான்.
அவ ஏன் என்னோட அத்தை பொண்ணாவோ, மாமா பொண்ணாவோ பொறக்காம போயிட்டானு அவங்க அப்பா அம்மாவையெல்லாம் திட்டிருக்கேன். மௌனத்தை எப்படியாவது கலைக்க வேண்டுமென அவன் முடிவெடுத்துவிட்டான் என நண்பன் நினைக்காமலில்லை.
என்ன திட்ட வச்சிடாத அசிங்கமா.. இதோடு முடித்துக் கொண்டான்.
சாலையில் யார் பெயரைக் கேட்டாலும் எந்த பெண்ணை பார்த்தாலும் திரும்பி பார்க்காமல் அவனால் செல்ல முடிவதில்லை. ஒரு வேளை திரும்பி பார்க்காமல் விட்டுவிட்டால் அவனிடமிருந்து அவள் தொலைந்து விடுவாளோ என்ற பயம்கூட அவனை நாடியிருக்கலாம்.,
உனதல்லாத முகங்களையெல்லாம் உன் முகமாக பார்க்கிறேன்.
அவளும் அதே நிலையில் தான் இருந்தால், அவள் பார்வைகளும் அவனை தேடி தேடியே தொலைந்துக் கொண்டேயிருந்தன. இருந்தாலும் மீண்டும் எதாவது, எங்கிருந்தாவது பிரச்சனை முளைத்துவிடுமோ என்ற அச்சம் அலை எழுப்பிக் கொண்டே இருந்தது அவளுள்.
என்னைக்கும் பஸ்ஸ விட்டு எறங்குனதும் கண்டுக்காம போவாள், ஆனா அன்னைக்கு ஒரு நா பஸ்ஸவிட்டு எறங்குனதும் எதோ சொன்னா மச்சி..!
நண்பன், உள்ளுக்குள் எரிமலையாக பொங்கிக் கொண்டிருந்தான்.
ஆங்.. இனிமேல் படிக்கட்டுல தொங்காத, உனக்கு சினிமா புடிக்குமா, தஸ்த்வேஷ்க்கி யாருன்னு தெரியுமா..? டாலி மனைவியைப் போல என்னை காதலிப்பியா..? இப்படி எதை எதையோ கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தான் என்ன சொல்லிருப்பானு..?
வெயிலில் உருகும் பனிக்கட்டியை நான் உறைந்து நின்றேன், என்னை கடந்துப் போனாள்.
ஆவேசம் கொண்டவனைப் போல...
டேய்... டேய்.., அதுக்கு அடுத்த நாள் தான் அவளோட அண்ணன் எங்கிட்ட சண்டைக்கு வந்தான். நானும் அவளும் பேசாமல் பேசிக்கொள்வதை பார்த்துட்டு எந்த வெரும்பயலோ வீட்டுல சொல்லிட்டானுவுனு நெனைக்குறேன்.,
எதையும் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிட்டான், நண்பன். ஒரு நாளைக்கு எத்தன தடவை தான்...?
இனி என்னை பார்ப்பாளா, பழகுவாளா, சிரிப்பாளா, காதலிப்பாளா. இந்த வார்த்தை வேண்டாம் அடித்து விடலாம். காதலிப்பாளா. மற்றதெல்லாம் நடந்தாலே அந்த வார்த்தை தானாக பற்றிக்கொள்ளும். இதை அவன் வெளியில் சொல்லி முடிப்பதற்குள் தொண்டைக்குழியில் அழுத்தம் ஏற்பட்டு வாயிற்கும், கண்ணிற்கும் இடையே ஒரு பிரளயமே அழிந்து முடிந்தன.
என் தப்பு தான் அவ பாக்குற, சிரிக்குறானு அவளை வச்சி ஒரு கோட்டையை கட்டினது. அவ நாயின்னு பாத்து சிரிச்சலோ, பேயின்னு பாத்து மொரச்சலோ.., யாருக்கு தெரியும். அந்த கழுதைக்கு மட்டும் தான் தெரியும்.
என் தப்பு தான் அவ பாக்குற, சிரிக்குறானு அவளை வச்சி ஒரு கோட்டையை கட்டினது. அவ நாயின்னு பாத்து சிரிச்சலோ, பேயின்னு பாத்து மொரச்சலோ.., யாருக்கு தெரியும். அந்த கழுதைக்கு மட்டும் தான் தெரியும்.
அவனுக்கு அவனே சமாதானம் செய்துக் கொண்டான். அது அன்னைக்கு தான..! இன்னைக்கா..! இனி என்னைக்கு அப்படி நடக்குமோ..?
நண்பன் இல்லாததை அப்போது தான் உணர்ந்தான்.
நண்பன் இல்லாததை அப்போது தான் உணர்ந்தான்.
அவள் ஏறும் பேருந்திற்காக காத்திருந்தான், அவளுக்காகவும் தான்.
பார்வையின் கிறுக்கல்கள்- VI
காலையில் நடந்தேறிய டக... டக... டக..., நாடகத்தை போலவே இப்போதும்
அவர்களை பார்த்து கண்ணடித்தது.,
அவன் ஏறினான், அவளும்.
பேருந்து பயணத்தில் மட்டும் ரத்தம் மாற்றமடைகின்றன என்பதை உறுதிசெய்து கொண்டான்.
அவளை பார்த்தான், அவள் மனம் இறுகிப் போய்விட்டதா அல்ல இதயத்திலிருந்து பெயர்ந்து போய்விட்டதா என்பது பற்றி அவனுக்கு தெரியவில்லை.
இனி அவளை பார்த்தாலோ, சிரித்தாளோ அவள் அண்ணனிடம் கூறி விடுவாளோ...? அப்படி இருந்தால் அவள் மீது தன மனோ ரதத்தை ஓடவிட செய்வது வீண் மன அலுப்பாக முடிந்துவிட கூடுமோ என்று கலங்கினான். எதற்கும் அவள் பார்வையில் அர்த்தங்களை கண்டறிவது என்ற நோக்கில் தன் பார்வையால் அவள் பார்வையை தடவினான்.
உண்மையை எங்கும் மறைத்து விட முடியாது, மௌனமாக வேண்டுமானால் இருக்கலாம். அவளும் அப்படி தான் பேருந்தில் ஏறுவதற்கு முன்புவரை மௌனமாக இருந்தால், அவளின் பார்வையும், சிரிப்பும் உண்மைகளை உடைத்தெறிந்துவிட்டு சிதறி விழுகின்றன என்மேல்...!
கெடைக்காத சந்தோசாம், கெடைச்ச துக்கம் இது இரண்டிலும் அவ தான் இருக்கணும்னு ஞாபகப்படுத்த தான் அவளோட பார்வையும், சிரிப்பும்னு எனக்கு தோணுது மச்சி...,
தனிமையில் இருப்பதை அப்போது தான் உணர்ந்தான்.
அவனிடமிருந்து யாரும் எடுத்து கொள்ளாத தனிமை, அனைவரையும் வெறுக்க வைக்கும் தனிமை, தன் நிலைமை உணர வைக்கும் தனிமை..... எத்தனை எத்தனையோ தனிமைக்குள் சிதைந்து போயிருந்தான்.
கூட்ட நெரிசலில் அவளின் சிரிப்பு மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. என் சிரிப்போ மற்றொரு பெண்ணிற்கு ஆறுதலாக இருந்திருக்கும். யாரோ ஒரு பெண் என்னை மட்டும் பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள், பல நாட்களாக நடப்பது தான் ஏன்னு தெரியல. நான் யாரோ ஒரு பெண்ணிடமிருந்து என்னை மீட்டுக் கொண்டு அவளை நோக்கி போனேன்.
உங்கிட்ட பேசணும். பஸ்ஸ விட்டு எறங்குனதும் கொளத்துகிட்ட வா.., நெற்றியில் அடித்ததை போல் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
என்னிடமா..? என்ன பேசுவான்..? எதுக்கு பேசணும்..? நான் எறங்க மாட்டேன்., ரஷோமான் படத்தில் வருவதை போன்ற பல வழிகளில் தன் மனநிலையை அவிழ்த்துவிட்டாள், கடைசியாக அவனுடைய பார்வையிலே தஞ்சமடைந்தாள்.
டக... டக... டக... நின்று விட்டது.
அவன் இறங்கி அவளுக்காக காத்திருந்தான்.
குளம். இற்றுப் போன மயானமாய் தெரிந்தது. சுவர்களிளெல்லாம் பல கிறுக்கல்கள், சில காதலர்கள், சில பல கேட்ட வார்த்தைகள்....
அவள் வருவதற்குள் இந்த சுவரில் நமக்கென்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும். ஆனா அவ பேர் தான் தெரியாதே..! அதனால என்ன அவள்டயே கேட்டுக்கலாம். வேணாம்.. வேணாம்.. நாமலே ஒரு பேர் வச்சிட்டு அவள்ட்ட சொல்லுவோம். என்ன பேர் வைக்கலாம், ....பேர் வைக்கலாம், ..... வைக்கலாம் குழம்பிக் கொண்டே இருந்தான்.
எப்பொழுதோ விளையாடிய F L A M E S மனைவியாக கட்டியனைத்து.
அவன் பெயருடன் ஒவ்வொரு பெண் பெயரையும் சேர்த்து சேர்த்து அடித்து அடித்து நொந்து கொண்டிருந்தான். அவளை நினைத்து அவன் உருகுவதைப்போல் ஒவ்வொரு பெண் பெயரும் அவன் முன்னே உருகிக் கொண்டே இருந்தன. முயற்சிகளுக்கு வெற்றியாக ஒரு பெயர் ஒட்டிக்கொண்டது.
ஒரு வழியாக பெயரை தேர்ந்தெடுத்த அதே சுறுசுறுப்பில் அவர்கள் பெயரை செதுக்க ஆரம்பித்தான்.
ஒட்டிக்கொண்ட பெயரை பார்த்து, பார்த்து புளங்காகிதம் அடைந்தான். தொட்டான், முத்தமிட்டான், சிரிட்டான், பறட்டான், ரசிட்டான், கட்டிப்பிடிட்டான்... தனக்குள் பல டான்கள் வெளியேறுவதை நினைத்து கர்வம் கொண்டான்.
அவள் வந்த பிறகு அவளுக்கு இந்த பெயரை தான் சுட்டனும். அவளைப் பார்த்ததிலிருந்து அவன் அவளாக மாறினான். அவள் அவனாக மாற்றிக்கொண்டான், பெயரையும் தான்.
அவள் பெயர் அவன். அவன் பெயர் அவள்.
இரு பெயரும் ஒன்றாக சேர்வதென்பது அபூர்வம் என தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.
காற்று பலமாக வீச ஆரம்பித்தது.
அவள் மௌனமாக வந்து நின்றாள். எப்பொழுதும் அவளுடனே ஒட்டியிருக்கும் சிரிப்பு காணமல் போயிருந்தது.எதனை நினைத்தோ கவலைப்படுகிறாள் என நினைத்து கொண்டான். அவளை ரொம்ப நேரம் நிற்க வைக்க விரும்பவில்லை என முடிவு செய்தான்.
நா உன்ன காதலிக்குறேன்....,
சற்று மௌனம். இதை இப்படி ஒத்த வார்த்தையில சொல்றதுக்கு கூட எனக்கு ஒரு மாதிரி இருக்கு. காதல்ங்குறது யார் சொல்லியும் புரிய வைக்க கூடாது, தானா புரிஞ்சி வரணும்... வார்த்தைகள் வெள்ளப்பெருக்கு போல வெளிவந்து விழுமென அவனே எதிர் பார்க்கவில்லை.
அவன் அப்படி வெளிப்படையாக பேசினது அவள் உள்ளுக்குள் ரசித்திருந்தாலும் வெளியில் எதையும் காட்டி கொள்ளாதவாறு இருந்துக் கொண்டாள்.
எதுவும் சொல்லாமல் சென்றுவிட வேண்டுமென்பது தான் அவளின் எண்ணம். அவன் அவளை மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்ததால், நாளைக்கு சொல்றேன். இதை மட்டும் சொல்லிவிட்டு நகர முற்பட்டால், முடியவில்லை. அவனுடைய கற்பனைக்குள் இருப்பவளால் எப்படி நகர முடியும்.
இனி நீ என்னை பார்க்கவே முடியாது, உன்னைவிட்டு ரொம்ப தூரம் போறேன், திரும்பி எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது..! உரக்க சொல்லிக்கொண்டு இருந்தது மனது.
அவள் பார்வையோ, நீண்ட தூரம் செல்வதென்றால் அதற்க்கான வலி எப்படியிருக்கும் என்பதை போல் இருந்தது.
காற்று வீசுவது மறைந்து போனது.
தனிமை...! தனிமை...! தனிமை...!
பக்கம் பக்கம் சேர்ந்தால் தானே பக்கங்கள் ஆகும் யாருடனோ சொல்லிக் கொண்டிருந்தான்.
"அவர்களது பெயர் மகே{ஸ்}வரி".
பின் குறிப்பு:
- இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் உண்மையே, சில இடங்களில் மட்டும் கற்பனை.
- இன்றும் இந்த கதாப்பாத்திரங்கள் அலைந்துக் கொண்டு தான் இருக்கின்றன.
- எனக்கு பிடித்த எழுத்தாளர்களிடம் இருந்து ஓரிரு வார்த்தைகளை கடனாக எடுத்துக் கொண்டேன். சரியோ, தவறோ மன்னித்துவிடுங்கள்.
- இதில் இடம்பெற்றுள்ள சில வரிகள் பிடித்திருந்தால் அடிக்கொடிட்டோ, குறிப்பு எடுத்துக்கொண்டோ உபயோப்படுத்திக் கொள்ளலாம். நான் ஏதும் ஆட்சேபனை செய்ய மாட்டேன்.
- விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக